தமிழகத்தின் உரிமைகளை, தமிழ் மக்களின் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடியவர்கள், அடுத்த தலைமுறையின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள் தான் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே கடலையூரில் திமுக சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி செய்தியாளரிடம் கூறுகையில், "இந்தியா ஜனநாயக நாடு. அதனால் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியிலும் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
அவர்கள் நடிகர்கள் அல்லது வேறு துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். அதைப் பற்றி யாரும் கவலைப்படப் போவதில்லை. அதேபோல், யார் வேண்டுமென்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதை தடுக்கக் கூடிய எண்ணம் கிடையாது.
இந்த மண்ணின் அடிப்படைப் கொள்கைகளைப் புரிந்து கொண்டு மக்களுக்காகப் பாடுபடக்கூடியவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். வர வேண்டும். அதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
தமிழகத்தின் உரிமைகளை, தமிழ் மக்களின் சுயமரியாதையை பாதுகாக்கக்கூடியவர்கள், அடுத்த தலைமுறையின் உரிமைகளுக்காக பாடுபடக்கூடியவர்கள் தான் ஆட்சிப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த கட்சி திமுக தான் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்" என்றார்.