இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

பட்டாசு விற்பனை மீதான தடையை ராஜஸ்தான் அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்: முத்தரசன்

செய்திப்பிரிவு

பட்டாசு விற்பனை மீதான தடையை ராஜஸ்தான் அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (நவ. 4) வெளியிட்ட அறிக்கை:

"ராஜஸ்தான் மாநில அரசின் சுகாதாரத்துறை பட்டாசு வெடிப்பதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்பட்டு, கரோனா நோயாளிகளுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் பட்டாசு விற்பனையில் 95 சதவீதம் பட்டாசுகள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உற்பத்தியாகிறது. இந்தத் தொழில் மூலம் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபடவில்லை எனத் தெரிவித்துள்ள நிலையிலும், காற்று மூலம் கரோனா பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்துள்ள நிலையிலும், ராஜஸ்தான் அரசின் தடையுத்தரவு 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயலாக அமைந்துள்ளது.

அண்மையில் அயோத்தியில் நடந்த ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் ஏராளமான பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை காட்டி உள்நாட்டு சுய தொழில்களை அழிக்கும் செயலின் விளைவாகவே பட்டாசு வெடிப்புக்குத் தடை போடும் நிலை ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மத்திய பாஜக அரசின் வேளாண் வணிகச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ராஜஸ்தான் மாநில அரசு குடிசைத் தொழிலாகவும், சிறு, குறு தொழில்கள் என்ற முறையிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளித்து வரும், ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டாளர்களின் சுய தொழிலையும் பாதுகாக்கும் முறையில் ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ள பட்டாசு வெடிப்புக்கான தடையை ரத்து செய்ய வேண்டும்''.

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT