தமிழகம்

தமிழகம் முழுவதும் பரவலாக 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். பிற உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். மதுரை, சிவகங்கை, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 72 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கோவை,நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம்மேகமூட்டத்துடன் காணப்படும்.

SCROLL FOR NEXT