பாஜகவின் வேல் யாத்திரையின்போது கலவரத்தை தூண்டஎதிர்ப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
தமிழக பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ள வெற்றிவேல் யாத்திரை வரும் 6-ம் தேதி தொடங்கி டிச.6-ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது.
ஜே.பி.நட்டா பங்கேற்பு
இந்த யாத்திரையில் பாஜகஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், பாஜக தேசிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார்.
மத்திய பாஜக அரசின் அனைத்து திட்டங்களிலும் தமிழகம் அதிகம் பயனடைந்துள்ளது. வேல் யாத்திரையின்போது இதைமக்களிடம் பிரச்சாரம் செய்வோம்.கரோனா முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள்,காவல் துறையினர், ஊடகத்துறையினர், வருவாய் துறையினருக்கு யாத்திரையின்போது என்-95 முகக்கவசங்கள் வழங்கப்படும்.
தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களை யாத்திரையின்போது மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
மு.க.ஸ்டாலின் அச்சம்
வேல் யாத்திரையைக் கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடுக்கமடைந்துள்ளார். அந்த பயத்தை வெளிப்படுத்த முடியாமல் தனக்கு பின்னால் இருப்பவர்கள் மூலம் வெளிப்படுத்தி வருவது நகைப்புக்குரியது. பாஜக மக்களைச் சந்திக்கக் கூடாது, பாஜகவளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே யாத்திரையை எதிர்க்கிறார்கள். யாத்திரையை எதிர்ப்பவர்களே கலவரத்தை தூண்ட திட்டமிடுகிறார்கள். அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல் யாத்திரையில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தோம்.
ரஜினி ஆன்மிகவாதி. தேசியசிந்தனை கொண்டவர். அவர்அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். 2016 பேரவைத் தேர்தலில் 90-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை பாஜக நிர்ணயித்தது. 35-க்கும் அதிகமானதொகுதிகளில் 2 அல்லது 3-வதுஇடம்பிடித்தது. வரும் தேர்தலிலும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.