தமிழகம்

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் முறையான இடம் இல்லாததால் வீதிகளில் தேங்கும் குப்பை: சுகாதார சீர்கேடு அபாயம்; நிரந்தர தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாததால், பல்வேறு இடங்களில் வாரக் கணக்கில் தேங்கிக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகள், 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 60 வார்டுகளிலும் தினமும் பல நூறு டன் குப்பைசேகரமாகிறது. குப்பை கொட்டப்பட்டுவந்த பாறைக்குழிகள் நிரம்பியதால், மாநகரில் குப்பையை அப்புறப்படுத்துவதில் சுணக்கம் நிலவுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சிக்கு நேரிலும், பலர் சமூக வலைதளங்களிலும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திருப்பதி முத்துகிருஷ்ணன் என்பவர் கூறும்போது, "பழவஞ்சி பாளையத்தில் உள்ள பிரதான குப்பைத் தொட்டி நிரம்பிமூன்று வாரங்களாகி விட்டது. மாநகராட்சி குப்பையை அப்புறப்படுத்தாததால், தொடர்ந்து சாலையில் கொட்டப்படுகிறது.

மாநகரின் பல்வேறு இடங்களில் இதே நிலை தொடர்கிறது. கோயில்வழி, ஏ.பி.டி.சாலை, தென்னம்பாளையம் சந்தை, ராமையா காலனி உள்ளிட்ட பகுதிகளில் குப்பை மலைபோல தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

குப்பை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டி வைக்கப்படுவதில்லை. ஆனால், சொத்துவரி, தண்ணீர் வரியை மாநகராட்சி தீவிரமாக வசூலிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல ஆயிரம் கோடிகளில் பணிகள் நடைபெறுகின்றன.

திருப்பூர் மாநகர மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். வீட்டில் இருந்து எடுக்கப்படும் குப்பையை முறையாக பிரித்து, உரிய முறையில் திடக்கழிவு மேலாண்மையை போர்க்கால அடிப்படையில் அமல்படுத்த வேண்டும். அதன் பின்னர், ‘‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் போன்ற மற்ற ஆடம்பர திட்டங்களை அமல் படுத்தலாம்" என்றார்.

நிரம்பிய பாறைக்குழிகள்

முன்னாள் கவுன்சிலர் அ.கோவிந்தராஜ் கூறும்போது, "குப்பை கொட்டப்பட்டு வந்த பாறைக்குழிகள் நிரம்பியதால், எங்கு குப்பை கொட்டுவது என்று தெரியாமல் அப்படியேசாலையில் விட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். திருப்பூர்மாநகரில் பாறைக் குழிகளில் தான் இதுவரை குப்பை கொட்டப்படுகிறது. முறையாக ஓரிடத்தில் குப்பை கொட்டப்பட்டு, அதனை தரம் பிரிக்க இத்தனை ஆண்டு காலம் மாநகராட்சி ஏற்பாடுசெய்யாமல் இருப்பது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரபாண்டி, முத்தணம்பாளையம், கோயில்வழி எனபல்வேறு பகுதிகளிலும் குப்பைஅள்ளப்படாமல் வீதிகளில் தேங்கிக் கிடக்கின்றன. மொத்தம் உள்ள 4 மண்டலங்களில் இரண்டு மண்டலங்களில் பிரச்சினை என்றாலும், அதுவே 30 வார்டுகள் வருகிறது. மக்களிடம் இருந்து பெறப்படும் குப்பையை முறையாக அப்புறப்படுத்த, உரிய இட வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

இடம் தேர்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையர்க.சிவக்குமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, "திருப்பூர்மாநகரில் 1 மற்றும் 4-வது மண்டலத்தில் குப்பை அப்புறப்படுத்துவதில் பிரச்சினை இருந்தது.

தற்போது அது தீர்க்கப் பட்டுள்ளது. நவம்பர் 4-ம் தேதி முதல் குப்பை அப்புறப்படுத்தப்படும். 1 மற்றும் 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட குப்பையை அப்புறப்படுத்த, அந்தந்த பகுதிகளிலுள்ள இடங்களை தேர்வு செய்துள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT