தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய 20 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 5 கோடியே 68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய அக்டோபர் 24-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா கூறியதாவது:

செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும். இதுவரை செப்டம்பர் 20, அக்டோபர் 4, 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் செய்ய 20 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் 001 என்ற படிவத்தை பூர்த்தி செய்து ரூ. 25 கட்டணம் செலுத்த வேண்டும். புதிதாக பெயரை சேர்க்க விரும்புபவர்களும் 001 படிவத்தை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT