தமிழகம்

பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: திமுக இளைஞரணி செயலர் உதயநிதி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து பாதுகாப்பான சூழல் ஏற்படும் வரை பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் சுமார் 1000 பேருக்கு பொற்கிழி வழங்கினார். பின்னர் அவர் பேசியது:

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரையும் நான் உங்கள் உருவத்தில் பார்க்கிறேன். அதனால்தான் உங்களிடம் ஆசி பெற வந்துள்ளேன். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை பாஜககட்டுப்படுத்துகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்றுக் கொடுத்தோம்.

இன்னொரு 6 மாதங்களில் தேர்தல் வர உள்ளது. அதில் இன்னொரு பாடத்தை கற்றுக் கொடுக்க போகிறோம். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்றார்.

தொடர்ந்து இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக அரசு யோசித்து தெளிவான அறிவிப்பு வெளியிடுவதில்லை. வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

தள்ளிப்போகலாம்

தற்போது இந்த தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரோனா தொற்று குறைந்து பாதுகாப்பான சூழ்நிலை அமையும் வரை பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

இந்தக் கூட்டங்களில் மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான க.சுந்தர், எம்எல்ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT