ஈரோடு கடைவீதி பகுதியில் கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென காவல்துறை மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 
தமிழகம்

ஜவுளி கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

ஈரோடு கடைவீதியில் முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், ஈரோடு கடைவீதி பகுதியில் உள்ள ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள், சாலையோரக் கடைகளை நடத்துவோர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஈரோடு மாநகராட்சி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

மணிக்கூண்டு அருகே சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி, காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு மணிக்கூண்டு, கடைவீதி பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளில் மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருந்தவர்கள், மாநகராட்சி அறிவித்து இருந்த வழிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். தீபாவளி வரை நாள்தோறும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT