போச்சம்பள்ளி பகுதியில் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக நுகர்வு குறைந்ததால், கொய்யாப் பழங்களை அறுவடை செய்யாமல் விவசாயிகள் மரத்திலேயே விட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, சந்தூர், பனங்காட்டூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, பண்ணந்தூர், ஜெகதேவி சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் பலர் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். லக்னோ சிவப்பு, வெள்ளை கொய்யா, நாட்டு கொய்யா ரகங்களைச் சேர்ந்த கொய்யா மரங்களை வளர்த்து வருகின்றனர். இங்கு விளையும் கொய்யாப் பழங்கள், கேரள மாநிலத்துக்கும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக நுகர்வு குறைந்துள்ளதாகவும், வெளியூர் வியாபாரிகள் வராததால் கொய்யாப் பழங்களை அறுவடை செய்யாமல் மரத்திலேயே விட்டுள்ளதாகவும் போச்சம்பள்ளி பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபால் கூறும்போது, ‘‘வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து கொய்யாப் பழங்களை வாங்கிச் செல்வது வழக்கம். சமீப காலமாக கரோனா தொற்று பரவல் பிரச்சினையால் வியாபாரிகள் யாரும் கொள்முதல் செய்ய போச்சம்பள்ளி வருவதில்லை.
தற்போது பரவலாக பெய்த மழையால் கொய்யா விளைச்சல் அதிகரித்துள்ளது. கரோனா ஊரடங்குக்கு முன்னர், அதிகபட்சமாக கிலோ ரூ.40 வரை விற்பனையான கொய்யாப் பழங்களை, தற்போது கிலோ ரூ.20-க்குத்தான் கேட்கின்றனர். மழை மற்றும் குளிர் காலங்களில் கொய்யாப் பழத்தின் நுகர்வு குறைவாக இருக்கும். இதன் காரணமாகவும், கொய்யாப் பழங்களை வாங்கிச் செல்ல வியாபாரிகள் வருவதில்லை. இதனால் கொய்யாப் பழங்களை பறிக்காமல் மரத்திலேயே விட்டுவிட்டேன். மரத்தில் இருந்து பழுத்து விழும் கொய்யாப் பழங்கள், கிளிகள், அணில்கள், பறவைகளுக்கு உணவாகிறது,’’ என்றார்.