அண்ணாநகர், பாடி ரயில் நிலை யங்களில் இருந்து மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கினால், திருமங்கலத்தில் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க தயாராக உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணாநகர் மற்றும் பாடியில் கடந்த 2003-ம் ஆண்டில் ரயில் நிலையங்கள் அமைக் கப்பட்டு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. நடை மேடை, குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை, டிக்கெட் கவுன்ட்டர், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.7.29 கோடி செலவில் இந்த ரயில் நிலையங் கள் அமைக்கப்பட்டன. இதனால் பாடி, அண்ணாநகர், திருமங் கலம், ஜெ.ஜெ நகர் பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிமாணவர்கள், பணிக்கு செல் வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
கடந்த 2006-ல் பாடி மேம்பாலம் கட்டும் பணியின்போது, தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக் காக இந்த 2 ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. போதிய அளவில் கூட்டம் வரவில்லை என்பதால் ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது. தற்போது, அப்பகுதிகளில் போக்கு வரத்து தேவை அதிகரித்துள்ள தால், மீண்டும் ரயில் சேவை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசித்து வருவ தாக உயர் அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.
இது தொடர்பாக அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.நவநீதன் கூறும்போது, ‘‘பல கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள அண்ணாநகர், பாடி ரயில் நிலையங்கள் தற்போது பாழடைந்துள்ளன. அண்ணாநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துவிட்டது. காலை, மாலை நேரங்களில் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அண்ணாநகர், பாடி ரயில் நிலை யங்களை திறந்து மீண்டும் மின்சார ரயில்களை இயக்க வேண்டும். அத்துடன் மெட்ரோ ரயில் பணிகளில் திருமங்கலத்தில் இந்த பாதையை இணைத்தால், பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன உயர் அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘சென்னை யில் இயக்கப்படும் மின்சார ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில்களும் இணையும் வகையில் தான் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எழும்பூர், சென்ட்ரல், பரங்கிமலை ஆகிய ரயில் நிலையங்களில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
அண்ணாநகர், பாடி ரயில் நிலையங்களில் மீண்டும் ரயில் சேவை தொடங்கினால், மெட்ரோ ரயில் சேவையை இணைக்க தயாராக இருக்கிறோம். திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் அண்ணாநகர் ரயில் நிலையத்தை இணைக்க சுமார் 1.5 கி.மீ. தொலைவுக்கு பணிகள் மேற்கொண்டாலே போது மானதாக இருக்கும்’’ என்றனர்.