திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியானது திங்கள்கிழமைகளில் கட்சிகள், அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடமாக மாறிவிட்டதால், மனுக்கள் அளிக்க வரும் சாமானிய மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
கடந்த 1999 ஜூலை 23-ம் தேதி மாஞ்சோலை தொழிலாளர்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தபோது, போலீஸார் நடத்திய தடியடியில் 17 பேர் மரணமடைந்தனர். இச் சம்பவம் பெரும் சோக வரலாறாக உள்ளது. இச் சம்பவத்துக்குப்பின் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலகம் முன் திரள்வதும், கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சிலர் கொக்கிரகுளம் எம்ஜிஆர் சிலை சந்திப்பிலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
சிலர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருவதால், போலீஸார் கெடுபிடிகளை அதிகப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் சாமானிய மக்கள் எளிதாக ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை தேவை
இதுகுறித்து திருநெல்வேலி யைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் கூறும்போது, “வலிமையை பறைசாற்றுகிறோம் என்று, கொடிகளுடன் ஆட்சி யர் அலுவலகம் முன் திரண்டு நிற்கின்றனர். கோஷங்களை எழுப்புகின்றனர். புகைப்படங் களுக்கு போஸ் கொடுக்கின்றனர். நுழை வாயிலை அடைத்து போராட்டம் நடத்த எவ்வித அனுமதியும் இல்லை. ஆனால், திங்கள்கிழமைகளில் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலானது ஆர்ப்பாட்ட களமாகவே மாறிவிடுகிறது.
இதை தடுக்க வேண்டும். பொதுமக்கள் எளிதாக ஆட்சியர் அலுவலகம் வந்து கோரிக்கை மனுக்களை அளிக்கும் வகையிலான நிலைமை இருக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.