தமிழகம்

டீன் பதவிக்காலம் நீடிக்க அனுமதித்த விவகாரம்: காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஆளுநருக்கு கடிதம்  

என்.சன்னாசி

மதுரை காமராசர் பல்கலைக்கழக டீன் பதவிக்காலம் நீடிக்க அனுமதி வழங்கிய பிரச்சினையில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக ஆளுநருக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் புகார் கடிதம் எழுதியுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை இருந்தபோது, பலகலைக்கழக டீனாக நல்லகாமன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் மூன்றாண்டுகள். 65 வயதுக்கு மேல் நீடிக்க முடியாது என, பல்கலைக்கழக விதிமுறை கூறுகிறது.

இதன்படி, 2017 நவ., 2-ம் தேதி டீனாக பதவியேற்ற நல்லகாமனின் பதவிக்காலம் 2020 நவ., 2ல் முடிவடைந்தது என்றாலும், அவரது பிறந்த தேதியின் அடிப்படையில் ஆக., 6ல் அவருக்கு 65 வயது நிறைவு பெற்றது. ஆனாலும், அவருக்கு மேலும் 2 மாதத்திற்கு பதவி நீடிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக மதுரை மக்கள் உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர் அந்தோணிராஜ் தமிழக ஆளுநருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘‘பல்கலை சட்ட விதிகளை கண்காணித்து, நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை பல்கலை நிர்வாகத்திற்கு உள்ளது.

இருப்பினும், விதியை மீறி பல்கலைக்கழக டீன் பதவிக் காலம் மேலும் 2 மாதம் நீடிப்புச் செய்து, சம்பளமும் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்‘‘ என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT