தமிழகம்

கரோனா ஒழிப்பில் அர்ப்பணிப்போடு களப்பணி: ஒப்பந்தச் செவிலியர்களை நிரந்தரம் செய்யக் கோரிக்கை

என்.சுவாமிநாதன்

உலக அளவில் கரோனா நோய் கொடூரமாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள், செவிலியர்களோடு சேர்ந்து ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள செவிலியர்களும் தீவிரக் களப்பணி ஆற்றிவருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வைக் கருத்தில் கொண்டு, செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பத்மநாபபுரம் எம்எல்ஏவும் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோதங்கராஜ் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:

''உலகமே கரோனா தொற்றால் நிலைகுலைந்து இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் அதனை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தொய்வின்றிச் சிகிச்சையளிப்பதில் செவிலியர்களின் பங்கு முதன்மையானது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், இந்தச் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுகிறர்கள். இந்தத் தேர்வு வாரியமானது கடந்த 2015-ம் ஆண்டு செவிலியர் பணிக்கான தேர்வுகளை நடத்தித் தமிழகம் முழுவதும் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை, ஒப்பந்த முறையில் செவிலியர்களாக நியமித்துப் பணி ஆணை வழங்கியது. ஆனால், அந்த ஆணையில் இருக்கும் விதிகளை அரசு சரியாகப் பின்பற்றவில்லை. பணி ஆணையில் முதல் இரு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணிசெய்ய வேண்டும் எனவும், அதன் பின்னர் செவிலியர் பணியிடம் நிரந்தரம் செய்யப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

ஒப்பந்தக் காலத்துக்கு 7,700 ரூபாய்தான் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், பணி ஆணையில் குறிப்பிட்டதுபோல் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பெரும்பான்மையானோர் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. கடந்த 6 வருடங்களில் இதுவரை 2,300 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 5000 செவிலியர்கள் இன்னும் 7,700 ரூபாய்தான் ஊதியம் பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களையே பணி நிரந்தரம் செய்யாத அரசு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடப்பாண்டில் மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒப்பந்தச் செவிலியர்களாக நியமித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு செவிலியர்களின் பணியைக் கணக்கில்கொண்டு, காலமுறை ஊதியத்தோடு கூடிய பணி நிரந்தரத்தை வழங்க உடனே அரசாணை பிறப்பிக்க வேண்டும்''.

இவ்வாறு மனோதங்கராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT