தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தென்திருப்பேரைச் சேர்ந்தவர் ராமையா தாஸ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். தற்போது அவர் பாஜகவின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், ராமையா தாஸுக்குச் சொந்தமான வயலில் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருக்குச் சொந்தமான ஆடுகள் கடந்த 20 நாட்களுக்கு முன்பு மேய்ந்துள்ளது. இது தொடர்பாக ராமையா தாஸ், மாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை தென் திருப்பேரையில் உள்ள டீக்கடையில் பாஜக மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் ராமையா தாஸ் டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் இசக்கி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த ஆழ்வார் திருநகரி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராமையா தாஸ் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்தனர்
இதற்கிடையில், உயிரிழந்த ராமையா தாஸின் உறவினர்கள், நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரியும், நிதி உதவி அளிக்கக் கோரியும் திருச்செந்தூர் - திருநெல்வேலி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணப்பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய இழப்பீடு வழங்கப்படும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என உறுதி அளித்ததின் பேரில் ராமையா தாஸின் உறவினர்கள் மறியலைக் கைவிட்டனர்.
இருப்பினும், இந்தப் போராட்டத்தால் திருச்செந்தூர் - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
சாலை மறியலைக் கைவிட்ட ராமையா தாஸின் உறவினர்கள், கொலைக்குக் காரணமானவராகக் கருதப்படும் இசக்கி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்களை அடித்து நொறுக்கினர். அத்துடன், தீ வைப்புச் சம்பவத்திலும் ஈடுபட்டனர்.
மோதல் தொடர்வதைக் கட்டுப்படுத்த சம்பவப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.