புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பெல் நிறுவனத்தின் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"திருமயம் பெல் நிறுவனத்தை தனி யூனிட்டாக மாற்ற வேண்டும். நிறுவனத்தின் பணியாளர்களுக்கு குடியிருப்பு, பள்ளி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும். பணபலன்களை உடனே வழங்க வேண்டும்.
கரோனாவைக் காரணம் காட்டி பணியாளர்களிடம் இருந்து உணவுக்காக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பிபியுடிஎஸ், ஐஎன்டியுசி, சிஐடியு, எல்பிஎப் ஆகிய தொழில் சங்கங்களைச் சேர்ந்தோர் நிறுவனத்தின் அருகே இன்று (நவ. 3) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகளை விளக்கி தொழிற்சங்கங்களின் பொதுச் செயலாளர்கள் டி.பழனிசாமி, என்.குமரேசன், பி.பெருமாள், பி.இளையராஜா உள்ளிட்டோர் பேசினர். பணியாளர்களின் போராட்டத்தினால் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.