தொழிலாளர்களுக்குக் கடந்த ஆண்டைப் போல் இந்த வருடமும் 20% தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (நவ. 3) வெளியிட்ட அறிக்கை:
"பண்டிகை காலங்களில் உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார இன்னல்களை களைந்து, உற்சாகப்படுத்தி அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் போனஸ் வழங்கும் திட்டம்.
1986-1987 ஆம் ஆண்டு கருணைத் தொகையாக ரூ.500 வழங்கப்பட்டு வந்தது. 1987-1988 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களின் கோரிக்கையால் கருணைத் தொகை சதவீதமாக மாற்றப்பட்டது. 1995-1996 ஆம் ஆண்டு போனஸ் 8.33% மற்றும் 9.67% கருணை தொகை சேர்த்து 18 சதவீதமாக வழங்கப்பட்டது. 1997-1998 ஆம் ஆண்டு 8.33% கருணைத் தொகை 11.67 சதவீதமாக மொத்தம் 20% வழங்கப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டு தமிழக அரசு 20% என்பதை 8.33 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ஆனால், அப்போது தொழிலாளர்களின் போராட்டத்தின் கோரிக்கையை ஏற்று அன்றைய தமிழக அரசு 2003-2004 ஆம் ஆண்டுகளில் இருந்து மீண்டும் 20 சதவீதமாக அறிவித்தது. அவை இன்றுவரை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த வருடம் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிகின்ற போக்குவரத்து துறை, மின்சார வாரியம், நுகர்பொருள் வாணிபகழகம், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், மற்றும் போனஸ் பெற தகுதி உடைய தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு போனஸ் 8.33% போனஸ், 1.67% கருணைத் தொகையும் சேர்த்து ஆக 10 சதவீதமாக அறிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு அளித்த போனஸில் பாதியாகும். இந்த வருடம் போனஸ் என்பது 01.04.2019 முதல் 31.03.2020 வரை உள்ள போனஸ் ஆகும். இது கரோனா காலத்திற்கு முன்னர் பணிபுரிந்ததற்கு அளிக்க வேண்டியதாகும். கடந்த ஆண்டு 8.33% போனஸ், 11.67% கருணைத் தொகையும் சேர்த்து 20% அளித்தது.
அதேபோல், இந்த வருடமும் போனஸ் வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி பரிசீலனை செய்து வழங்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.