தமிழகம்

மழைநீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தும் நூறு வயது முதியவர்: 5-வது தலைமுறையுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

மழைநீரை சேகரித்துவைத்து அதை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி வருகி றார் கால்பந்தாட்ட வீரரும் 100 வயது முதியவருமான எஸ்.ஏ. நடராஜன்.

விருதுநகர் இளங்கோவன் தெருவைச் சேர்ந்த எஸ்.ஏ. நடராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி (88). பருப்பு வியாபாரியான நடராஜன், சிறந்த கால்பந்தாட்ட வீரர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே வியாபார வர்த்தக சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். எண்ணெய், பருப்பு வகைகளுக்கான விலைகளை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்.

இவர்களுக்கு வன்னியராஜன், ஜெயகர், ராமநாதன், தயானந்தன் என 4 மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்களும், இவர்களது குடும்பத்தினரும் விருதுநகர் மட்டுமின்றி, சென்னை, கோவை, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். 5-வது தலைமுறை கண்டுள்ள நடராஜன்- பரமேஸ்வரி குடும்பத்தில் தற்போது மகன்கள், மகள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள் என 69 பேர் உள்ளனர்.

விருதுநகரில் உள்ள திருமண மண்டபத்தில் எஸ்.ஏ.நடராஜனின் நூறாவது பிறந்தநாள் விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று நடராஜன்- பரமேஸ்வரி தம்பதியிடம் ஆசி பெற்றனர்.

கால்பந்தாட்ட வீரரான எஸ்.ஏ. நடராஜன் திருமணத்துக்குப் பிறகு சைவ உணவு மட்டுமே அளவாக சாப்பிட்டு வருகிறார். மகன், மகள் என பெரிய குடும்பம் இருந்தும் யாருக்கும் தாங்கள் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக இத்தம்பதி தனியாகவே வசித்து வருகின்றனர். மனைவி பரமேஸ்வரி சமைத்துக் கொடுக்கும் உணவை மட்டுமே எஸ்.ஏ. நடராஜன் உண்பது வழக்கம். தினமும் அதிகாலை எழும் பழக்கம் உள்ள இவர், காலைக் கடன்களை முடித்தபின் தினமும் 3 கி.மீட்டர் நடை பயிற்சி மேற்கொள்கிறார். அதன்பின், பல்வேறு செய்தித்தாள்களை படிக் கிறார். அதுமட்டும் இன்றி, வறண்ட பகுதியாக இருந்தாலும், அவ்வப் போது மழை பெய்யும்போது தொட்டிகளில் மழை நீரை சேமித்து வைத்து, பின்னர் செப்புக் குடங்களில் ஊற்றிவைத்து அந்த நீரையே எப்போதும் குடிநீராகப் பயன்படுத்தி வருகிறார். எஸ்.ஏ.நடராஜன்.

வெளியூர் சென்றாலும் மழை நீரையே எடுத்துச் சென்று குடிக்கும் பழக்கத்தை பல ஆண்டுகளாக பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT