பிரியதர்ஷினி 
தமிழகம்

பயிற்சி வகுப்பு செல்லாமல் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவி

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு வையாபுரி திடலைச் சேர்ந்தவர் யோகநாதன். இலங்கைத் தமிழரான இவரது இளைய மகள் பிரியதர்ஷினி(17). மணல்மேடு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த பிரியதர்ஷினி, கடந்த 2019-20-ல் பிளஸ் 2 தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இவர், நீட் தேர்வில் 128 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்கள் அளவில் 494-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி பிரியதர்ஷினி கூறியதாவது:

என் தந்தை கூலி வேலைதான் செய்து வருகிறார். தினமும் அவர் கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும். குடும்பச் செலவுக்கே என் தந்தையின் வருமானம் போதுமானதாக இல்லாததால் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த என்னால் தனியார் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற முடியவில்லை.

என் வகுப்பாசிரியர் சரிதா, என் படிப்புக்கும், நீட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்யவும் உதவினார். மேலும், பல்வேறு உதவிகளை செய்து நீட் தேர்வை எழுத எனக்கு ஊக்கமளித்தார்.

மேலும், எனது பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் வழிகாட்டினார்கள். அதனால் எனக்கு நீட் தேர்வு பற்றிய பயம் இல்லாமல், அதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது.

தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு கிடைத்துள்ளதால், தாழ்த்தப்பட்ட பிரிவு மற்றும் தாயகம் திரும்பிய தமிழர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் எப்படியும் எனக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன் என்றார்.

SCROLL FOR NEXT