கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அமைச்சர் துரைக்கண்ணு மறைந்ததை அடுத்து அவர் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்த பாபநாசம் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் சென்னை காவேரி மருத்துவமனை, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அமைச்சர் துரைக்கண்ணுவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. மேலும், அவர் பல்வேறு இணைநோய்கள் பாதிப்பில் உள்ளதும், சி.டி.ஸ்கேன் சோதனையில் அவரது நுரையீரல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை (31/10) இரவு 11.10 மணி அளவில் துரைக்கண்ணு காலமானார். அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் 2006-ம் ஆண்டு முதன்முறையாக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 2011, 2016 ஆம் ஆண்டு என 3 முறை சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்ட அவர் வேளாண்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் அவர் வகித்து வந்த வேளாண்துறை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் துரைக்கண்ணு தேர்வு செய்யப்பட்ட பாபநாசம் தொகுதி அவர் மறைவு காரணமாக காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
ஒரு உறுப்பினர் மறைந்து 6 மாதத்துக்குள் அந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது விதி. அதற்கு அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் முறைப்படி அறிவிக்கவேண்டும் என்பது விதி.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ளதால், இதற்கு முன் காலியாக உள்ள குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, பாபநாசம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.