தமிழகத்தில் 2021-ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம் என பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் பேசினார்.
மதுரை பாஜக மாநகர் அலுவலகத்தில் வேல் யாத்திரை ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநிலத் துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் பேசுகையில், "வேல் யாத்திரையின் போது அறுபடை வீடுகளில் ஒரு லட்சம் பேர் கூட வேண்டும். மாற்றுக் கட்சியினரையும் வேல் யாத்திரையில் பங்கேற்க செய்ய வேண்டும்.
பேசுபவர் பாஜக மாவட்டத் தலைவர் சீனிவாசன்
தமிழக மக்கள் பாஜகவை வரவேற்க தயாராகிவிட்டனர். தமிழகத்தில் 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றிப்பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறோம்.
கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் பிரமிக்கும் வகையில் பாஜக கூட்டங்களில் கூட்டத்தைக் கூட்டி மாற்றத்தை ஏற்படுத்துவோம். வேல் யாத்திரை சிறப்பாக நடைபெற மாவட்ட தலைவர் தலைமையில் 25 குழுக்கள் அமைக்க வேண்டும். அதிகளவில் விளம்பரம் செய்ய வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் ரேணுகா தேவி, மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்க பெருமாள், நிர்வாகிகள் ஹரிசிங், பாலசுந்தர், செல்வகுமார், பாலகிருஷ்ணன், ஹரிஹரன், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.