தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய 114 பேர் கைது: எஸ்.பி. தகவல்

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில் எப்போதும்வென்றான் காவல்நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை தலைமையில் தலைமைக் காவலர் காளியப்பன் மற்றும் காவலர் ஜெய்சங்கர் ஆகியோர் இன்று காலை ரோந்து சென்றனர்.

அப்போது சிவஞானபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் (42) என்பவர் தனது வீட்டு முன்பாக சுமை வேனில் மூடைகளை ஏற்றி கொண்டிருந்திருக்கிறார். இதனை போலீஸார் சோதனையிட்டனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 93 மூடைகளில் 580 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.9.25 லட்சமாகும். இதையடுத்து அறிவழகனை போலீஸார் கைது செய்தனர். 580 கிலோ புகையிலை பொருட்களையும், சுமை வேனையும் பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து ரூ.4.05 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர். இதுதொடர்பாக அறிவழகனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் எப்போதும்வென்றான் காவல் நிலையத்துக்கு வந்து, பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பார்வையிட்டு, உதவி ஆய்வாளர் முத்துமாலை தலைமையிலான போலீஸாரை பாராட்டினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 71 வழக்குகள் பதிவு செய்து, 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.7.30 லட்சம் மதிப்புள்ள 73 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, 9 இரு சக்கர வாகனம், 2 நான்கு சக்கர வாகனம் மற்றும் ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல், கடந்த 4 மாதங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 108 வழக்குகள் பதிவு செய்து, 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.32.77 லட்சம் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 1 இரு சக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது சம்மந்தமாக ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார், என்றார் அவர்.

அவருடன் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், பயிற்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் போலீஸார் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT