தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கரோனா தடுப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட தற்காலிக மருத்துவ பணியாளர்கள். 
தமிழகம்

காலிப்பணியிடங்களில் தொடர்ந்து பணியாற்ற அனுமதி கோரி தூத்துக்குடியில் தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் மனு

ரெ.ஜாய்சன்

காலிப்பணியிடங்களில் தொடர்ந்து பணியாற்ற அனுமதி கோரி தூத்துக்குடியில் தற்காலிக மருத்துவப் பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் கடந்த சில வாரங்களாக திங்கள்கிழமை தோறும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து வருகின்றனர்.

அதிகாரிகள் மனுக்களை பொற்றுக் கொள்வதில்லை. முக்கியமான பிரச்சினையாக இருந்தால் மட்டும் சில பிரதிநிதிகளை மட்டும் சந்தித்து ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொள்கிறார். மற்றவர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.

மருத்துவப் பணியாளர்கள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர், செவிலியர், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், ஆய்வக நுட்பநர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது பணிக்காலம் முடிந்துவிட்டதாக கூறி செப்டம்பர் 31-ம் தேதி முதல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து அளித்த மனு விபரம்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர், செவிலியர், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் போன்றவர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். இதனால் நாங்கள் ஏற்கெனவே பணியாற்றி வந்த தனியார் மருத்துவமனைகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு இந்த பணியில் வந்து சேர்ந்தோம். மாவட்டம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகள், கரோனா தடுப்பு முகாம்களிலும் பணியாற்றி வந்தோம். இந்த நிலையில் திடீரென பணி முடிந்து விட்டதாகவும், பணிக்கு வரவேண்டாம் என்றும் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளோம். நாங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளோம். எங்களை தொடர்ந்து காலிப்பணியிடங்களில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல் குவாரி:

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை சேர்ந்த சேர்ந்த விவசாயிகள், அந்த பகுதி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கோதண்டராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சீனி பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு விபரம்:

கயத்தாறு வட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வருகிறோம். அந்த பகுதியில் நாங்கள் மக்காச்சோளம், சிறுகிழங்கு, சீனிக்கிழங்கு, சீனிஅவரை மற்றும் பட்டஅவரை போன்ற பயிர்களும், பழமரங்களும் பயிரிட்டு உள்ளோம். எங்கள் விவசாய நிலங்களுக்கு மத்தியில் சிலர் சரள் குவாரி மற்றும் கல் குவாரி நடத்த அனுமதி கோரி இருப்பதாக தெரிகிறது. அந்த இடத்தில் குவாரிக்கு அனுமதி அளித்தால் எங்கள் விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்களுக்கு செல்லும் மாடுகள் பாதிக்கப்படக் கூடும். விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். ஆகையால் அந்த பகுதியில் குவாரி நடத்த அனுமதிக்க கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் 18 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒரு சதவீதம் பழங்குடியினருக்கும், 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்க வேண்டும் என்று இடஒதுக்கீடு சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நாங்கள் வாக்களிக்கப்போவது இல்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை வசதி:

காயல்பட்டினம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராம மக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், காயல்பட்டினம் 14-வது வார்டு லட்சுமிபுரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு உள்ள 6 தெருக்களில் இன்னும் மணல் சாலை மட்டுமே உள்ளது. எனவே சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். அதே போன்று தெரு குழாய்கள் அமைத்து குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எட்டயபுரம் தாலுகா மாவில்பட்டி ஊராட்சியைசேர்ந்த விசுவகர்ம சமுதாய மக்கள் பிச்சைபெருமாள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த, எங்கள் ஊரில் மயான சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதற்காக 2 முறை அரசு நிதி ஒதுக்கியும், சாலை போடப்படவில்லை. எனவே பொதுமயான சாலை, ஆதிதிராவிட பொதுமயான சாலை ஆகியவற்றை உடனடியாக சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT