தமிழக அரசு தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி பகுதி நேர ஆசிரியர்கள் கடலூரில் மாவட்ட ஆட்சியரிடம் கருணை மனு அளித்தனர்.
இதுகுறித்துப் பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பொதுமக்கள் குறைகேட்பு தினமான இன்று( நவ.2-ம் தேதி) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார். பின்னர் காணொலிக் கருத்தரங்கம் மூலம் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரியிடம் பேசினார். பின்னர் கருணை மனு அளிக்கப்பட்டது.
அந்த கருணை மனுவில், ''பகுதி நேர ஆசிரியர்களான நாங்கள் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல் போன்ற பாடங்களை 10 ஆண்டுகளாக மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வருகிறோம். 2012-ம் ஆண்டு பணியில் சேரும்போது எங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.5 ஆயிரம் சம்பளமானது 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ரூ7 ஆயிரத்து 700 ஆக வழங்கப்படுகிறது.
முதலில் 16,549 ஆக இருந்த பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது 12 ஆயிரம் பேர் மட்டுமே பணிபுரிகிறோம். ஜாக்டோ- ஜியோ வேலை நிறுத்தக் காலங்களில் பள்ளிகளை முழு நேரமும் திறந்து நடத்தினோம். எங்களைக் காலமுறை ஊதியத்தில் கருணையுடன் பணி அமர்த்த வேண்டுகிறோம். இதனைக் கருணை மனுவாக அளித்து, பகுதிநேர ஆசிரியர்களான எங்களைப் பணி நிரந்தரம் செய்யத் தமிழக அரசுக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
நிகழ்வில் பகுதி நேர ஆசிரியர்கள் கைலாசநாதன், ஸ்ரீலதா, பாக்கியலட்சுமி, திலீப்குமார், கிருஷ்ணமூர்த்தி, பிரபு, ராஜசேகர், பிரகாஷ், அப்பர்சாமி, பழனிவேல், சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.