கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே வனத்தில் உள்ள பாறை ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்த அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர். 
தமிழகம்

சிந்துசமவெளி முத்திரை முத்திரை விலங்கைப் போன்று வேப்பனப்பள்ளி பாறை ஓவியத்திலும் விலங்கின் தோற்றம்: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியத்தில், சிந்துசமவெளி விலங்கின் தோற்றத்தை போன்ற உருவங்கள் இடம்பெற்றுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகில் உள்ள ஒரு பாறை ஓவியத் தொகுப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் சென்றனர். பாறை ஓவியம் இருக்கும் பகுதியை நக்கநாயனபண்டா என்று கிராம மக்கள் அழைக்கின்றனர். பாறை ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்த பின்னர் அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியது:

வெண்மை மற்றும் காவி நிறம்கலந்த ஓவியங்களும், பாறை கீறல்களும் இந்த பாறை ஓவியத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. பலவித குறியீடுகள், சின்னங்கள் இதில் உள்ளன. 3 இடங்களில் விலங்கின் மீது மனிதன் அமர்ந்துள்ளபடி உள்ளது. 2 விலங்குகள் தனித்து காணப்படுகின்றன. மேலும், ஒரு பெண் உருவம் விலங்கின் மீது அமர்ந்து பயணிப்பது போன்ற ஓவியமும் உள்ளது. நுணுக்கமான உருவங்களிலும் ஆண், பெண் உருவங்களை வேறுபடுத்தி கண்டறியும் வகையிலான துல்லிய உடலமைப்பை இடம்பெறச் செய்துள்ளனர். இதுதவிர, மனித உடலும் பறவை தலையும் கொண்டதாக 2 ஓவியங்கள் இருக்கின்றன. ஒரு பறவை எதையோ உண்பது போன்றஓவியம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆங்காங்கே கோலங்கள், பாண்டில் விளக்கு போன்றவையும் இடம்பெற்றிருக்கின்றன.

ஓவியத் தொகுப்பின் முக்கியஅம்சமாக ஒற்றைக் கொம்பு உடைய காளை போன்ற விலங்கின் உருவம் இடம்பிடித்திருக்கிறது. இதன் வால் அருகே திமில் போன்றதோற்றம் காணப்படுகிறது. சிந்துசமவெளி பகுதி அகழாய்வின் போது கிடைத்த, 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய முத்திரைகளில் காணப்படும் விலங்குகளின் ஓவியமும், வேப்பனப்பள்ளி அருகே கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் விலங்கின் ஓவியமும் ஒற்றுமை கொண்டதாகக் காணப்படுகிறது.

தமிழகத்துக்கும், சிந்து சமவெளிக்கும் இடையே அன்றைய காலத்தில் தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டு வரும் கருத்துக்குஇந்த ஓவியங்கள் மேலும் வலிமை சேர்க்கும் வகையில் உள்ளன. இந்த ஓவியத் தொகுப்பு பற்றி தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளும்போது இன்னும் பல அரிய வரலாற்றுத் தகவல்களும், முன்னோரின் வாழ்வியலும், மிகப் பரந்த எல்லைகள் வரை கொண்டிருந்த போக்குவரத்து தொடர்புகளும் வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு கோவிந்தராஜ் கூறினார்.

SCROLL FOR NEXT