கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை சிறிது உயர்ந்து கிலோ ரூ. 100-க்கு நேற்று விற்பனையானது. ஆனால், தொடர்மழை காரணமாக ரப்பர் பால் வடிப்பு தொழில் முடங்கியுள்ளது. ரப்பர் சாகுபடியாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தமிழக அரசு நிறுவனமான ரப்பர் கழகம் சார்பில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் மரங்கள் உள்ளன. இங்கு 3 ஆயிரம் பேர் நிரந்தரத் தொழிலாளர்களாகவும், 1,000 பேர் தற்காலிகத் தொழிலாளர்களாகவும் பணிபுரிகின்றனர்.
மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் ரப்பர் உற்பத்தியாகிறது. 2011-ம் ஆண்டு ஒரு கிலோ ரப்பர் ரூ. 250-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் படிப்படியாக விலை சரிந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு கிலோ ரப்பர் ரூ. 91 முதல் 95 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ரப்பர் விலை சற்று உயர்ந்து, ஒரு கிலோ ரப்பர் 100 ரூபாய் 50 காசாக இருந்தது. விலை சிறிது உயர்ந்து இருந்தாலும் குமரி மாவட்டத்தில் தொடர்மழையின் காரணமாக ரப்பர் பால் வடிப்பு தொழில் நடைபெறவில்லை.
உற்பத்தி பாதிப்பு
முன்னோடி ரப்பர் விவசாயி ஒருவர் கூறும் போது, “மத்திய அரசு ரப்பர் இறக்குமதியை தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ரப்பர் இறக்குமதியாவதால்தான், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரப்பருக்கு போதிய விலை கிடைக்கவில்லை.
தற்போது கிலோ ரப்பர் ரூ. 100 ஆக உயர்ந்துள்ளபோதும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பால் வடிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால், வருமானமின்றி சிரமப்படுகிறோம்” என்றார் அவர்.