தமிழகம்

மதுக்கடை விற்பனை நேரத்தில் மாற்றம் தேவை: டாஸ்மாக் பணியாளர் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மதுக்கடை விற்பனை நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.ராஜசேகர், தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா ஊரடங்கு காலத்துக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நேரம், பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்தது. இதனால் விற்பனை யாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. விற்பனையை இரவு 10 மணிக்கு முடித்தபின் கணக்குகளை சரிபார்த்து, பணத்தை எண்ணி முடிக்க இரவு 11 மணியானது. அதன்பின் வீடுகளுக்குச் செல்ல இரவு 12.30 மணியானது.

இந்த நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து கடை வருவாயைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் தளர்வு செய்யப் பட்டபோது மதுக்கடை விற்பனை நேரம், காலை 10 முதல் இரவு 8 மணி வரை என மாற்றப்பட்டது. இதனால் ஊழியர்கள் பணத்தை பாதுகாப்புடன் வைத்திருக்க முடிந்தது.

நேற்றுமுதல் மீண்டும் பழைய படி விற்பனை நேரம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விற்பனை நேரத்தை நிரந்தரமாக காலை 10 முதல் இரவு 8 மணி வரை என மாற்ற வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT