தமிழகம்

கதவணை இல்லாததால் தண்ணீரை தேக்கமுடியாத வடுவூர் ஏரி: ஏரியிலிருந்து வீணாக வெளியேறும் பாசன நீர்

வி.சுந்தர்ராஜ்

ஆற்றில் தண்ணீர் வரும்போது ஏரிக்கு தண்ணீர் உள்ளே வருவதும், ஆற்றில் தண்ணீர் குறையும்போது, ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறுவதுமாக உள்ளதால், மிகப்பெரிய பரந்த ஏரியில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி மிகப்பெரிய ஏரியாகும். கரிகால் சோழன் காலத்தின் பெருமையைக் கூறும் வரலாற்றுச் சான்றாக இந்த ஏரி உள்ளது. முற்கால சோழப் பேரரசுக்கு வித்திட்ட கரிகால் சோழன் ஆட்சிப் பொறுப்பேற்கும் முன் மிகப்பெரிய போர் நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணியில்தான் நடைபெற்றது.

சேர, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, களப்பிரர், குறு நில மன்னர்கள் ஒன்று சேர்ந்து கரிகால் சோழனை எதிர்த்து நடைபெற்ற போரில் வீரம் செறிந்த வீரர்களின் காயங்களுக்கு மருத்துவம் பார்த்த இடமே வடுவூர்.

புண்கள் ஆறினாலும், காயங்களால் உண்டான வடு மாறாத வீரர்கள் சிகிச்சை பெற்றதால் வடுவூர் என்று அழைக்கப்படுகிறது.

குடிநீர் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் சோழர் காலத்தில் வடுவூர் ஏரி அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது.

இந்த ஏரிக்கு கண்ணனாறு மூலம் தண்ணீர் வருகிறது. ஏரியின் தென்பகுதியில் நீர் வரத்துக்கான கதவணை சிறிய அளவில் உள்ளது. அதன் அருகில் சுமார் 20 அடி அகலத்துக்கு கரையேதுமின்றி உள்ளது. ஆற்றில் தண்ணீர் வரும்போது, இதன் வழியே உள்ளே வருகிறது. ஆற்றில் முறைப்பாசனம் வரும்போது, ஏரியில் உள்ள நீர் வெளியேறுகிறது. இந்த நீரை தேக்கி வைக்க உடனடியாக கதவணை அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் ரா.காளிதாஸ் கூறும்போது, “வடுவூர் ஏரி 30 ஆண்டுகளுக்கு முன் தூர் வாரப்பட்டது. அப்போது 18 அடி ஆழம் இருந்தது. தற்போது 6 அடி மட்டுமே ஆழம் உள்ளது. தண்ணீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாத நிலையில் உள்ளது. இந்த ஏரி முன்பு பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதால் வனத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

ஏரியின் நீரை ஆதாரமாகக் கொண்டு 20 கிராமங்கள் உள்ளன, இந்த ஏரியால் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுவருகிறது. நீ்ரைச் சேமித்து வைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திவரும் அதே நேரத்தி்ல், ஏரிக்கு வரும் தண்ணீரைச் சேமித்து வைக்க வழி இருந்தும் அதனை தவறவிடுகிறோம். இதனால் பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு அரசு உடனடியாக தடுப்பணை ஒன்றை அமைத்தால் தண்ணீரைத் தேக்கி வளம் பெற முடியும்” என்றார்.

SCROLL FOR NEXT