திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகே மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார் என்று கனிமொழி எம்பி கூறினார்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்திய பிறகே ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். ஆளுநர் காலதாமதம் செய்தது தமிழக மக்களுக்கு இழைத்திருக்க கூடிய அநீதி என்றார்.
தொடர்ந்து மாலையில் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்லாகுளம், சூரங்குடி, தத்தநேரி, அரியநாயகபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நாளை (நவ.2) திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். வரும் 3-ம் தேதி மாலை 5 மணியளவில் கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட திட்டங்குளம் மற்றும் நாலாட்டின்புதூா் கிராமத்தில், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்குகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி காட்டுராமன்பட்டி கிராமத்திலும், மாலை 6.30 மணிக்கு வள்ளிநாயபுரம் கிராமத்திலும், 7 மணிக்கு கடலையூா் கிராமத்திலும், 7.30 மணிக்கு திப்பனூத்து கிராமத்திலும் பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்களான கீதாஜீவன் எம்எல்ஏ, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.