பிரதமர் மோடி: கோப்புப்படம் 
தமிழகம்

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணு மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 14-ம் தேதி விழுப்புரத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை காவேரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்தது. அப்போது முதல் அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து, தீவிர சிகிச்சையில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்த நிலையில், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (அக். 31) இரவு 11.10 மணி அளவில் துரைக்கண்ணு காலமானார்.

அமைச்சர் துரைக்கண்ணு: கோப்புப்படம்

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல், இன்று (நவ. 1) மாலை, அவரது சொந்த கிராமமான, தஞ்சை மாவட்டம் வன்னியடி கிராமத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக, அவரது உடலுக்கு மூத்த அமைச்சர்கள், குடும்பத்தினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதமர் மோடி இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவினை அறிந்து வேதனையடைந்தேன். சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டார். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT