கர்நாடக அரசுக்கு சொந்தமான பூங்கா 
தமிழகம்

நீலகிரியில் இ-பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும்: கர்நாடக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

இ-பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என, கர்நாடக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை ஃபர்ன் ஹில் பகுதியில் கர்நாடக அரசுக்கு சொந்தமான 35 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் விருந்தினர் மாளிகை, புல்வெளி, ஆர்கிட் பூக்கள் கொண்ட மினி கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா ஆகியவை உள்ளன. இப்பூங்கா திறக்கப்பட்டு, ஒரு ஆண்டுக்குள் கரோனா தொற்று காரணமாக, மாவட்டத்தில் அனைத்துப் பூங்காக்களும் மூடப்பட்டபோது இந்த பூங்கவும் மூடப்பட்டது. தற்போது இ-பாஸ் தளர்த்தப்பட்டது காரணமாக மீண்டும் பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவும் திறக்கப்பட்டது.

கர்நாடக அரசு இ-பாஸ் முறையை ரத்து செய்த நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் குறிப்பிட்ட அளவில் மட்டும் சில கட்டுப்பாட்டுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதிகளவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்தது.

இதனால் கர்நாடக பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இரண்டாவது சீசனுக்காக அடுக்கி வைக்கப்பட்ட சால்வியா, டேலியா, மேரிகோல்டு, குண்டு மல்லிகை உட்பட 30-க்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வண்ண மலர்கள் வாடத்தொடங்கியுள்ளன.

கர்நாடக பூங்கா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, "இ-பாஸ் முற்றிலும் தடை செய்யப்பட்டால் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். பூங்காவில் நடனமாடும் நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். டிசம்பர் மாதம் இந்த நீரூற்றுக்கள் செயல்பாடு தொடங்கும். தற்போது இ-பாஸ் முறைக்கு பதிலாக இ-பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியுள்ளதால், கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு, சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT