காரைக்கால் மாவட்டத்தில் ஒரு மீனவக் கிராமம், ரூ.7.5 கோடி செலவில், ஒருங்கிணைந்த நவீன கடலோர மீன்பிடி கிராமமாக உருவாக்கப்படவுள்ளது என, காரைக்காலில் நடைபெற்ற 66-வது புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்தார்.
பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் 1954-ம் ஆண்டு, நவ.1-ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. அதனால், நவ. 1-ம் தேதியன்று புதுச்சேரி விடுதலை நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்ததன. அதனடிப்படையில், 2014 ம் ஆண்டு நவ.1-ம் தேதி முதல் அரசு சார்பில் புதுச்சேரி விடுதலை நாளை கொண்டாடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, ஆண்டுதோறும் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று (நவ. 1) நடைபெற்ற 66-வது புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து, அமைச்சர், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் சமாதானப் புறாக்களை பறக்கவிட்டனர்.
பின்னர் அமைச்சர் பேசுகையில், "இவ்வாண்டு மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 2,830 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டு விவசாயிகளுக்கு உரிய விலை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டத்தில் விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் கீழ் டிராக்டர், பவர் டில்லர், பண்ணைக் கருவிகள் வாங்க ரூ.1.4 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முட்டை, கோழி இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க கோட்டுச்சேரியில் உள்ள கோழிப்பண்ணையை புதுப்பிக்கும் பணி நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழாண்டு வேளாண் பொறியியல் பெட்ரோ-வேதிப் பொறியியல், உயிரி-மருத்துவப் பொறியியல் ஆகிய புதிய பாடப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பட்டினச்சேரியில் மீன் இறங்கு தளம் அமைக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மட்சிய சம்படா யோஜனா திட்டத்தின் மூலம் 100 சதவீத நிதியுதவியுடன், காரைக்கால் பகுதியில் ஒரு மீனவக் கிராமம் ரூ.7.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த நவீன கடலோர மீன்பிடி கிராமமாக உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் மீனவர்களில் சமூக, பொருளாதார நன்மைகள் அதிகரிக்கும். அமிழ்தம் என்ற நடமாடும் உணவகம் மூலம் மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம் உள்ளாட்சி அமைப்பின் மூலம் முதல் கட்டமாக காரைக்கால் நகராட்சியில் நடப்பு நிதியாண்டில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி காரைக்கால் துறைமுகம்-இலங்கை வடக்குப் பகுதியிலுள்ள காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் படகு போக்குவரத்துக்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நடப்பு நிதியாண்டிலேயே பணிகளை விரைந்து முடித்து படகு போக்குவரத்தை தொடங்குவதற்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
விழாவில் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆனந்தன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரோனா பரவல் சூழல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் அணி வகுப்பு, கலை நிகழ்ச்சிகள் இடம் பெறவில்லை. பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்கவில்லை.