கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் (அக். 31) சிகிச்சை பலனளிக்காமல், சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.
அவரது மறைவுக்கு, அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தி:
"தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான துரைக்கண்ணு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (அக். 31) இரவு மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
ஆரம்பகால அதிமுக தொண்டர் துரைக்கண்ணு, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மீதும், தொடர்ந்து அதிமுக தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராகவும், பின்னர் பாபநாசம் ஒன்றிய அதிமுக செயலாளராகவும் பணியாற்றி, தற்போது தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் நல்ல முறையில் கட்சிப் பணிகளை ஆற்றி வந்தவர்.
அதிமுகவின் மீது தீவிர பற்று கொண்டிருந்த துரைக்கண்ணு, 2006, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்களில், அதிமுகவின் சார்பில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பணியாற்றியதோடு, தற்போது வேளாண்மைத் துறை அமைச்சராக சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றி வந்த பெருந்தகை.
துரைக்கண்ணுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.