சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த தினத்தையொட்டி, சென்னை ராஜ்பவன் நுழைவுவாயில் அருகே உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் உடனிருந்தார். 
தமிழகம்

பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்பு: ஆளுநர் மாளிகையிலும் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், காவல்துறை தலைமையகம் ஆகியவற்றில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ம் தேதிஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் பட்டேல் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் நேற்றுமலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆளுநர் மாளிகையின் பிரதான வாசல் எதிரே உள்ள பட்டேல் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். ஆளுநர் தலைமையில், செயலர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், பாதுகாப்பு அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோர் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள துறைச் செயலர்கள் அலுவலகங்களில் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பனகல் மாளிகை, எழிலகம் உள்ளிட்ட வளாகங்கள், சென்னை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு, காவல் துறை சார்பில் சென்னை தீவுத்திடல் நுழைவுவாயில் முன்பாக உள்ள ராஜாஜி சாலையில் காலை 10.30 மணி அளவில் அணிவகுப்பு பேரணி நடத்தப்பட்டது. இதில் காவல் துறையின் கமாண்டோ படை, ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, சென்னை பெருநகர குதிரைப்படை, காவல் வாத்தியக் குழு மற்றும் சிறப்பு பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள், போலீஸார் பங்கேற்றனர்.

தீவுத்திடலில் தொடங்கிய பேரணி, கொடி மர இல்ல சாலைவழியாக முத்துசாமி பாலம் வரை சென்று போர் நினைவுச் சின்னத்தை மீண்டும் வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துகொண்டு தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT