தமிழகம்

கடந்த ஆண்டைவிட தமிழகத்தில் நோய்த் தொற்று 15 மடங்கு குறைந்துள்ளது: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு பணிகளோடு சேர்த்து தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதால், மழைக் காலத்தில் பரவும் டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 15 மடங்கு குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் தீவிர கரோனா தடுப்பு நடவடிக்கையால் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து கரோனா சிகிச்சை மையங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனினும், ஆர்டிபிசிஆர் மூலம் பரிசோதனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும், அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மழைக் காலத்தில் டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் இருக்கும். கரோனா தடுப்பு பணிகளோடு சேர்த்து இதுபோன்ற தொற்று நோய்களையும் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதால் இதே நேரத்தில் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, நோய்த் தொற்று 15 மடங்கு குறைந்துள்ளது.

கரோனா காலத்தில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகதொழில் முதலீடுகளை ஈர்த்ததோடு, அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT