புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி நெ.1 டோல்கேட்டில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி. படம்: ஜி.ஞானவேல்முருகன் 
தமிழகம்

மத்திய, மாநில அரசுகளில் பணியாற்ற நேர்மையான அதிகாரிகளால் முடியவில்லை: காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

விவசாயிகள் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி நெ.1 டோல்கேட்டில் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியது:

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்ட பிறகே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தாமதத்துக்கான காரணத்தை ஆளுநரும், முதல்வரும் விளக்க வேண்டும். அதேபோல, நீதியரசர் கலையரசன் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில், மாநில அரசு 7.5 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்தது ஏன்?.

பாஜகவினர் வேல் யாத்திரை செல்ல உள்ளதாக அறிந்தேன். வேலும், வாளும் தமிழ்நாட்டில் எதுவும் செய்துவிட முடியாது. மொழி, கடவுள், மதத்தின் பெயரால் மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது.

மோடி தலைமையிலான மத்திய ஆட்சியிலும், பழனிசாமி தலைமையிலான மாநில ஆட்சியிலும் நேர்மையான, நல்ல அதிகாரிகளால் பணியாற்ற முடியவில்லை. இது அரசு நிர்வாகத்துக்கு மிகப்பெரிய கேடு. விருப்ப ஓய்வு பெறுவது என்ற சகாயத்தின் முடிவு சரியே என்றார்.

இதேபோல, அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட கே.எஸ்.அழகிரி பேசியபோது, “வேளாண் பொருளுக்குஉரிய விலை கிடைக்காதது, படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேல் யாத்திரை நடத்துவது தேவையற்றது. சசிகலா வருவதால் அரசியலில் மாற்றம் ஏதும் நிகழாது. மூன்றாவது அணி என்பது சாத்தியப்படாத ஒன்று. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெறும்” என்றார்.

SCROLL FOR NEXT