தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் தொடங்கியது. ஆரம்பத்தில் போதிய மழை பெய்யாவிட்டாலும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பின. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடித்தது.
மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் மட்டுமே தென்மேற்கு பருவமழை பெய்யும். மாவட்டத்தின் கிழக்கு பகுதிகள் வடகிழக்கு பருவமழையையே நம்பியுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. ஒரு நாள் மட்டுமே மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மற்ற நாட்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையே பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாலையில் மேகம் திரண்டு வந்தாலும் மழை பெய்யாமல் ஏமாற்றம் அளிக்கிறது. இதனால், குளத்து பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பெரியகுளம்
கீழப்பாவூர் பெரியகுளமானது சிற்றாற்றின் மூலம் நீர்வரத்து பெறுகிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் குளத்துக்கு தண்ணீர் வந்தபோது மதகு சீரமைப்பு மற்றும் பாலம் கட்டும் பணி நடைபெற்றது. இதனால், குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. 2 முறை தண்ணீர் வந்தபோதும் பணிகள் நிறைவடையாததால் குளத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்து வருவதால் நெல் விதைப்பு பணிகளும் தொய்வடைந்துள்ளது. மழையை எதிர்பார்த்து விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 108.90 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 364 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 804 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 117.19 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.56 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 33.25 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.