வேலூரில் உள்ள மண்டிகளில் வெங்காய மூட்டைகள் பதுக்கப் பட்டுள்ளதா? என்பதை மாவட்ட வழங்கல் அலுவலர் நேற்று ஆய்வு செய்தார்.
தமிழகத்துக்கு அதிகமாக கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங் களில் இருந்து வெங்காயம் வரு கிறது. அங்கு ஏற்பட்டுள்ள மழையின் காரணமாக வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், வெங்காய மூட்டைகள் பதுக்கலால் சந்தையில் கிலோ வெங்காயம் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களை பாதிக்கும் வகையில் வெங்காயத்தின் விலை இருப் பதால் அதை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைக்கும் பட்டியலில் வெங்காயத்தை மத்திய அரசு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சேர்த்தது. இதன்மூலம், மொத்த விற்பனையாளர்கள் 25 டன், சில்லறை விற்பனையாளர்கள் 2 டன் வெங்காயத்தை மட்டும் இருப்பு வைக்க முடியும். அரசின் விதிகளை மீறி அதிகளவு வெங்காயத்தை பதுக்கினால் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள மண்டிகளில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை மாவட்ட வழங்கல் அலுவலர் பானு தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வேலூர் மண்டித்தெரு, நேதாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காய மண்டிகளில் நடைபெற்ற சோதனையில் வெங்காய மூட்டை களின் இருப்பு விவரம், விற்பனை விவரங்களை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
சோதனை தொடரும்...
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் பானு கூறும்போது, ‘‘வேலூரில் 35 மண்டிகளில் சோதனை நடைபெற்றது. மொத்த விற்பனையாளர்கள் 25 டன்னும், சில்லறை விற்பனையாளர்கள் 2 டன்னும் இருப்பு வைக்க அனுமதி உள்ளது. ஆனால், வேலூரில் நடத்திய சோதனையில் மொத்த விற்பனையாளர்களிடம் அதிக பட்சமாகவே 5 டன் வெங்காயம்தான் இருப்பு இருந்தது. சில்லறை விற்பனையாளர்களிடமும் மிகக் குறைந்த அளவே வெங்காயம் இருந்தது. எனவே, வரும் நாட்களிலும் இந்த சோதனை தொடரும்’’ என்றார்.