நடிகர் ரஜினி வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் நல்ல முடிவை, நியாயமான முடிவை தான் எடுப்பார். நல்லாட்சி செய்பவர்களை தான் அவர் ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தை மீட்கபோகிறேன், இந்தியாவை மீட்கபோகிறேன், நாட்டை மீட்கபோகிறேன் என்று சொன்னவர்கள் வேலை இல்லாதவர்கள்.
முதல்வர் பழனிசாமி ஆட்சியில் தமிழகமும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவும் பாதுகாப்பாக உள்ளது. மக்கள் சுபிக்ஷமாக சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே யாரும் யாரையும் மீட்க வேண்டியதில்லை.
அதிமுக கூட்டணி வலுவான மெகா கூட்டணி. 2021-லும் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் முதல்வர் பழனிசாமி.
இதில் எதிர்கட்சிகளுக்கு எந்த பங்கும் இல்லை. இதில் ஸ்டாலின் உரிமை கோர முடியாது. ஸ்டாலினின் தப்பாட்டம் இனி மக்களிடம் எடுபடாது.
தேர்தல் நேரம் என்பதால் எதையெடுத்தாலும் நாங்கள் தான் என ஸ்டாலின் கூறுகிறார். இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
மக்களைப் பாதுகாக்க முதல்வர் பழனிசாமி வீதி உலா வருகிறார். ஆனால், ஏசி கம்ப்யூட்டர் அறைக்குள் கண்ணாடி மாட்டிக் கொண்டு, கண்ணாடியைப் பார்த்து பேசி வருகிறார் ஸ்டாலின். அவரது அரசியலை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எப்படியும் முதல்வராகிவிடலாம் என்ற அவரது நப்பாசை பலிக்காது.
நடிகர் ரஜினி காந்த் வெளிப்படை தன்மையுடன் பேசியுள்ளார். தனது உடல் நிலை இப்படி தான், உண்மை தான் எனபதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டாராக இருப்பவர், 70 வயதை கடந்த பின்னரும் கதாநாயகனாக நடிக்ககூடியவர் ரஜினிகாந்த்.
இன்றைய இளம் நாயகிகள் கூட அவருடன் நடிக்க ஆசைப்படுகின்றனர். அந்தளவுக்கு ரசிகர் பட்டாளத்தை கையில் வைத்திருக்கும் ரஜினி காந்த், தனது உடல்நிலை குறித்த தகவல்கள் வெளியானவுடன் அதனை வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துக் கொண்டுள்ளார்.
அவரது பேச்சில் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது, அவர் சொல்வது சரியான விளக்கம் தான். இன்றைய சூழ்நிலையில் சென்னை முதல் கன்னியாகுமரி முதல் அனைத்து மக்களையும் சந்திக்காமல் ஒரு இயக்கம் ஆரம்பிப்பது என்பது கஷ்டம்.
இந்த கரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் சுற்றிவர அவரது உடல் நிலை ஒத்துவருமா என்று அவரது நண்பர்கள் அச்சப்படுகிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அறிக்கையாக வந்துள்ளது. இதனால் அவர் பயப்படுகிறார் என்ற அர்த்தமல்ல.
மொத்தத்தில் ரஜினியின் எண்ணம் நல்ல எண்ணம். அவர் வந்தாலும் ஏற்று கொள்வோம், வரவில்லை என்றாலும் ஏற்று கொள்வோம். தமிழக மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே, அவர் நல்ல முடிவை, நியாயமான முடிவை தான் எடுப்பார். நல்லாட்சி செய்வர்களை தான் அவர் என்றும் ஆதரிப்பார் என்றார் அமைச்சர்.