தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.
தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரி மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற கிளையில் கடந்தாண்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தமிழக லோக் ஆயுக்தா தலைவர், சபாநாயகர், தலைமைச் செயலர் மற்றும் பொதுத்துறை முதன்மை செயலர் தரப்பில் துணைச் செயலர் பி.ஆர்.கண்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் பொது ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு 2014-ல் சட்டம் அமல்படுத்தியது. அதன்படி தமிழகத்தில் 2018-ல் லோக் ஆயுக்தா சட்டம் அமல்படுத்தப்பட்டது.
லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் 2 உறுப்பினர்களை தேர்வு செய்ய தமிழக முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.
அந்த தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என அவர் பதில் கடிதம் அனுப்பினார்.
இதனால் பெரும்பாலான உறுப்பினர்களின் முடிவு அடிப்படையில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.
அதையேற்று லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் 2 நீதித்துறை உறுப்பினர்களையும், 2 நீதித்துறை சாரா உறுப்பினர்களையும் ஆளுநர் நியமித்தார்.
இதில் நீதித்துறை சாரா உறுப்பினர்கள் நியமனத்துக்கு எதிராக உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்று நீதித்துறை சாரா உறுப்பினர்கள் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
நீதிபதி தேவதாஸ் தமையிலான தமிழக லோக் ஆயுக்தா அமைப்பு சுதந்திரமாக நடைபெற்று வருகிறது. விதிப்படியே லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.