ரூ.121.82 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளைக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டத்தில் காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், உக்கடம் உயர்மட்டப் பாலம், மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகிய சாலைகள் நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தப்பட்டன. இதையொட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதுபோலவே ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரையிலான 1.34 கி.மீ. நீளமுள்ள 4 வழி ஓடுதளம், உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை 345 மீட்டர் நீளமுள்ள இரு வழி இறங்கு ஓடுதளம், டவுன்ஹால் முதல் உக்கடம் சந்திப்பு வரை 284 மீட்டர் நீளமுள்ள இருவழி ஏறு ஓடுதளம் என மொத்த 1.970 கி.மீ நீளத்தில் ரூ.121.82 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இந்தப் பணிகளை இன்று மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து ஆட்சியர் ராசாமணி கூறும்போது, ''கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் பகுதியில் இப்பாலம் அமைவதால், பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மற்றும் நகரின் முக்கியப் பகுதியான டவுன்ஹால் உள்ளிட்ட கோவை மாநகர மத்தியப் பகுதிகளில் பெருமளவில் போக்குவரத்து குறையும். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடைவார்கள்'' என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் பெ. குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரை முருகன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிற்றரசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.