அண்ணாமலை: கோப்புப்படம் 
தமிழகம்

உயர்மின் திட்டங்களுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: பாஜக மாநில துணைத் தலைவருக்கு விவசாயிகள் சவால்

இரா.கார்த்திகேயன்

உயர்மின் திட்டங்களுக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை நிரூபித்தால், உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான ஈசன், தலைவர் பி.சண்முகசுந்தரம், நேர்மை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி ஆகியோர் திருப்பூரில் இன்று (அக். 31) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"காங்கேயம் பகுதியில் நடைபெற்ற பாஜக நிகழ்வில் பங்கேற்ற மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, உயர்மின்கோபுரம் அமைப்பதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், உயர் மின்கோபுர விவகாரத்தில், மத்திய அரசை எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறான செய்தி ஆகும்.

இந்திய தந்தி சட்டம் 1885-ம் ஆண்டு பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை வைத்துத்தான் நாடு முழுவதும் விவசாய நிலங்களில், உயர் அழுத்த மின் கோபுரங்கள் தற்போது அமைக்கப்படுகின்றன. மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், இந்திய தந்தி சட்டத்தைக் கொண்டு, சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள புகளூர் வரை 1,800 கிலோ மீட்டர் தூரத்துக்கு, உயர் அழுத்த மின் பாதை அமைத்து வருகிறது.

அதேபோல், பவர் கிரிட் நிறுவனம் தற்போது தமிழகத்தில் 6 உயர் மின் கோபுரத் திட்டங்களை விவசாய நிலங்கள் வழியாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை இந்திய தந்தி சட்டம் 1885-ஐக் கொண்டு, விவசாய நிலங்கள் வழியாக பவர் கிரிட் நிறுவனம் செயல்படுத்துவதற்கான அனுமதியினை, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த 2015-ம் ஆண்டு செப். 24-ம் தேதி வழங்கியது. அப்படி இருக்கும் போது, மத்திய அரசுக்கும், இந்தத் திட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வது மாபெரும் தவறு.

இதற்கு உயர் அழுத்த மின் கோபுரங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பிலும், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் நேர்மை மக்கள் இயக்கம் சார்பிலும் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.

விவசாயிகளின் வாழ்வாதார நிலையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல், விவசாயிகளின் போராட்டத்தைக் கேலி செய்வதும், அவதூறு பேசுவதும் இனி தவிர்க்கப்பட வேண்டும். அதேபோல், அவர் சொன்னதைப் போல் மத்திய அரசுக்கும், உயர்மின் திட்டங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்துவிட்டால், அண்ணாமலைக்குப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்"

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT