ஓசூர் வட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் 510.20 மி.மீ. மழை பதிவாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர் வட்டம் குளிர்ந்த தட்பவெப்பநிலை மற்றும் வளமான மண் நிறைந்த நிலப்பரப்பைக் கொண்ட பகுதியாகும். இப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 2,883 அடி உயரத்தில் அமைந்துள்ளதும், சராசரி மழை அளவு ஒரு ஆண்டுக்கு 822.30 மி.மீ. மழை பொழிவதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
மேலும் ஓசூரைச் சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பகுதி அமைந்துள்ளதாலும், நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளதாலும், இப்பகுதியில் குளிர்ந்த தட்பவெட்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக ஆங்கிலேயர் காலம் முதல் ஓசூர் பகுதி “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்பட்டு வருகிறது.
காலப்போக்கில் இப்பகுதியின் சராசரி மழை அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதால், குளிர்ந்த தட்பவெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக ஓசூர் நகரத்தை ஒட்டி சிப்காட் - 1, சிப்காட் - 2 என இரண்டு தொழிற்பேட்டைகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் உருவான பிறகு கடந்த 30 ஆண்டுகளாக மழை அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
ஓசூர் வட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால் பருவம் தவறி மழை பொழிவதும், ஒரு சில ஆண்டுகளில் மழையின் அளவு குறைவதும், பின்பு அதிகரிப்பதுமாக, தட்பவெப்பநிலை பெரிய அளவில் மாற்றமடைந்து வருகிறது. இதற்கு உதாரணமாக ஓசூர் பகுதியில் 2015-ம் ஆண்டில் சராசரியை விட அதிகமாக 1,110 மி.மீ. மழை பதிவாகியது. ஆனால் அதற்கு அடுத்த 2016-ம் ஆண்டில் 555.50 மி.மீ. என மழையின் அளவு பாதியாகக் குறைந்து போனது. அதனால் அந்த ஆண்டில் ஓசூர் வட்டத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு, விவசாயமும் பாதிக்கப்பட்டது.
அதன்பிறகு 2017-ம் ஆண்டில் ஓசூர் பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்து 1,344 மி.மீ. மழை பதிவானதால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி வழிந்தன. அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில் மீண்டும் மழையின் அளவு குறைந்து 615 மி.மீ. மழை பதிவானது, 2019-ம் ஆண்டில் 814 மி.மீ. மழையும், தற்போது 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 729 மி.மீ. மழை எனக் கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு மழையின் அளவு 3 ஆண்டுகளாகச் சராசரியை விட குறைவாகவே பெய்து வருகிறது. அதே வேளையில் நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
ஓசூர் பகுதியில் மாறிவரும் தட்பவெப்ப நிலைக்கேற்ப இப்பகுதியில் பொழியும் தென்மேற்குப் பருவமழையின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு மாற்றமடைந்து வருகிறது. குறிப்பாக 2015-ம் ஆண்டில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் 409 மி.மீ. மழையும், இதே காலகட்டத்தில் 2016-ம் ஆண்டில் மழையின் அளவு சிறிது அதிகரித்து 500 மி.மீ. மழையும் பதிவான நிலையில் 2017-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் மட்டும் வரலாறு காணாத வகையில் 850 மி.மீ. மழை கொட்டியது.
அதன்பிறகு 2018-ம் ஆண்டில் மீண்டும் மழையின் அளவு சரிவடைந்து 318 மி.மீ. மழையும், 2019-ம் ஆண்டில் 489.60 மி.மீ. மழையும் பெய்தது. நடப்பாண்டில் அதிக அளவாக ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 510.20 மி.மீ. மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் மழை அதிகரித்துள்ளதால் ஓசூர் பகுதியில் விளைநிலங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.
மேலும் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில் ஓசூர் பகுதியில் மேலும் மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்ப வாய்ப்பு உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.