வேளாண் கடன்களுக்கான வட்டி சலுகை ரத்து முடிவை மத்திய நிதியமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (அக். 31) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா காலத்தில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க அரசு வங்கிகளும், தனியார் வங்கிகளும் நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க ரூ.2 கோடி வரை, கரோனா காலத்தில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.
அப்படி கூட்டுவட்டி வசூலித்து இருந்தால் அவற்றை நவம்பர் 5-ம் தேதிக்குள் கடன் தவனை செலுத்தியவர்கள் வங்கி கணக்கில் திருப்பி செலுத்தும்படி வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த அறிவிப்பு வேளாண் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.
சிறு, குறு தொழில் செய்பவர்களுக்கும், நுகர்வோர் கடன், கிரெடிட் கார்டில் பொருள்கள் வாங்கியவர்களுக்கு என்று பல்வேறு கடன்களுக்கு சலுகை அளிக்கும் போது, 'உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது' என்ற நிலையிலும், உழைத்து நாட்டுக்கே சோறுபோடும் விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி கிடையாது என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்.
மற்றவர்களுக்கு அளித்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகையை போல் விவசாயிகளுக்கும் அளிக்க வேண்டும். அரசின் சலுகையை பெற அவர்களுக்கு முழு தகுதியும் உரிமையும் உள்ளது. மத்திய நிதியமைச்சகம், வேளாண் கடன்களுக்கான வட்டி சலுகை ரத்து முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.