மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத் தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்து ராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குரு பூஜை விழா அரசு சார்பில் நேற்று நடந்தது. தேவர் நினைவிடத்தில் காலை 9.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனி சாமி கூறியதாவது:
சுதந்திர போராட்டத்தின்போது நேதாஜி தலைமை யின்கீழ் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தியாகச் செம்மல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேயர் ஆட்சியின்போது குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர்.
எம்ஜிஆர் முதல்வர் ஆனதும் தேவர் ஜெயந் தியை அரசு விழாவாக அறிவித்தார். அதன்படி 1979-ம் ஆண்டு முதல் பசும்பொன்னில் அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதல்வர் ஆனதும் 1994-ல் சென்னை நந்தனத்தில் வெண்கலச் சிலை அமைத்தார். தேவர் நினை விடத்தையும் புதுப்பித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தை செழிப்பாக்க காவிரி - குண்டாறு திட்டத்தை அறிவித்துள்ளோம். மீனவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் ஆனதால் நேற்று அரசாணை வெளியிட்டோம். ஏழை மாண வர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் இந்த சட்டத்தின்படி இந்த ஆண்டே மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இச்சட்டத்தை நிறைவேற்றுமாறு எதிர்கட்சித் தலைவரோ, எதிர்க்கட்சியினரோ, பொதுமக்களோ கோரிக்கை வைக்கவில்லை. நாங்களாகத்தான் நிறைவேற்றினோம். இதைவைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறினார்.