தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் முதல் முறையாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதால், ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது பத்திரப் பதிவுத் துறையாகும். பத்திரப் பதிவுக் கட்டணம் மற்றும் முத்திரைத் தீர்வை ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் உள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் தினமும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. மேலும், திருமண பதிவு, சங்கங்கள் பதிவு போன்றவையும் நடைபெறுகின்றன.
சரிந்த பதிவு வருவாய்
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி கரோனா ஊரடங்கால் பத்திரப் பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டதால், பதிவு வருவாய் சரிந்தது. அதன்பின், பொருளாதார மீட்பு அடிப்படையில், வணிக நிறுவனங்களுக்காக மட்டும் பதிவுத்துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அதன்பின், குறைந்த அளவு டோக்கன் வழங்கப்பட்டு, சமூக இடைவெளி அடிப்படையில் பொதுமக்களும் பத்திரப் பதிவுக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பத்திரப் பதிவு அலுவலகங்களும் முழு அளவில் செயல்படத் தொடங்கின.
இந்நிலையில், கடந்த அக்.29-ம்தேதி, அதிகபட்சமாக தமிழகத்தில் 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
நாள்தோறும் அதிகரிப்பு
முன்னதாக, குறிப்பாக, கடந்த 2018-ம் ஆண்டு பிப். 12-ம் தேதிமுதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ஸ்டார் 2.0 கணினிவழி பதிவு திட்டத்தால், தற்போது நாள்தோறும் பதிவு செய்யப்படும் பத்திரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், நேற்று முன்தினம் அதிகபட்ச பத்திரப் பதிவை சார்பதிவாளர் அலுவலகங்கள் பதிவு செய்துள்ளன. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முந்தைய உச்சங்கள்
முன்னதாக, இந்த ஆண்டில், கடந்த செப். 14-ம் தேதி 19,769, செப். 16-ம் தேதி 19,681, பிப். 26-ம் தேதி 18,703, அக். 28-ம் தேதி 17,861 பத்திரப் பதிவுகள் என்பதே ஒரு நாளில் அதிகபட்ச பதிவாக இருந்தது. கடந்த ஆண்டில், செப். 4-ம் தேதி அதிகபட்சமாக 18,967 பதிவுகளும், 2018-ம் ஆண்டு செப். 12-ம் தேதி அதிகபட்சமாக 18,009 பத்திரங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பதிவுத் துறை செயலர் பீலா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “அக். 29-ம்தேதி அதிகபட்சமாக 20,307 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டது மூலம் ரூ.123 கோடியே 35 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.