கோவை மாநகர போக்குவரத்து காவல் துறையின் சார்பில், மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பங்களில் விதிமீறல் வாகன ஓட்டுநர்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, ‘உயிர்’ தன்னார்வ அமைப்பின் சார்பிலும் பல்வேறு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 164 கண்காணிப்பு கேமராக்கள் மாநகர போக்குவரத்து காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் செல்தல், சிக்னல்களில் நிற்காமல் செல்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்களை இந்த கேமராக்கள் மூலம் கண்டறிந்து புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கேமராக்கள் மூலம் மட்டும், தினமும் சராசரியாக 1,500 முதல் 2 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது. இந்த கேமராக்களில் தானியங்கி சாப்ட்வேர் மூலம் எடுக்கப்படும் புகைப்படம், கிழக்கு அல்லது மேற்கு போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். அங்குள்ள காவலர்கள் விதிமீறல் புகைப்படங்களை வகைப்படுத்தி, புகைப்படத்துடன் அபராதத்துக்கான சலான் போட்டு, சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு அனுப்புவர். காவல் நிலையங்களில் உள்ள போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள், தங்களுக்கான பிரத்யேக அடையாளக் குறியீடை பயன்படுத்தி, ‘எம்-பரிவாஹன்’ இணையதளத்தில் சென்று, விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்களுக்கான சலான்களை பதிவேற்றம் செய்வர். வட்டாரப் போக்குவரத்து துறை உதவியுடன், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் வாகன எண் கணக்கில் விதிமீறல் சலான் சேர்ந்துவிடும்.
அது குறித்த குறுந்தகவல் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு தெரிவிக்கப்படும். அந்த குறுந்தகவலில் உள்ள லிங்க்கை பயன்படுத்தி அபராதத் தொகையை செலுத்திக் கொள்ளலாம். இந்த முறை மூலம் 24 மணி நேரத்துக்குள் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராத சலான் அனுப்பப்பட்டுவந்தது.
தற்போது இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் ‘என்.ஐ.சி’ எனப்படும் தேசிய தகவல் மையத்துடன் மாநகரில் உள்ள 164 கேமராக்களும் இணைக்கப்பட்டுள்ளன. இனி, தானியங்கி முறையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மாநகர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வருவதற்கு பதில், என்.ஐ.சி இணையதள பக்கத்தில் சேர்ந்துவிடும். அங்கிருந்து புகைப்படங்கள் ‘எம்-பரிவாஹன்’ பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள், ‘எம்-பரிவாஹன்’ பக்கத்தில் சென்று என்.ஐ.சி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட விதிமீறல் சலான்களை பார்த்து விட்டு, ஓ.கே கொடுத்த பின்னர், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநரின் வாகன எண் பக்கத்துக்கு சென்றுவிடும். இந்த முறையால் காவலர்களின் பணிச் சுமை குறைவதோடு, விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சில மணி நேரங்களுக்குள் அபராதத் தொகை விதிக்கப்படும்’’ என்றனர்.
மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் முத்தரசு கூறும்போது, ‘‘புதிய நடைமுறை ஓரிரு தினங்களில் அமலுக்கு வரவுள்ளது. மேற்கண்ட திட்டத்துக்காக, மாநகரில் உள்ள 15 போக்குவரத்து காவல் நிலையங்களை சேர்ந்த உதவி ஆய்வாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.