மறைந்த முன்னாள் அமைச் சர் மன்னை நாராயணசாமி யின் முயற்சியால், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாமணி கிராமத்தில், கடந்த 1971-ம் ஆண்டு பாமணி உரத் தொழிற் சாலை தொடங்கப்பட்டது. இங்கு டிஏபி, பொட்டாஷ், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட், ஜிப்சம் ஆகியவற்றுடன் வேப்பம்புண்ணாக்கு கலந்து பாமணி 17.17.17 என்ற உரம் தயாரிக்கப் படுகிறது.
தொடக்க காலத்தில் 3 ஷிப்டாக இயங்கிவந்த இந்த ஆலை, கடந்த 2002-03-ம் ஆண்டுக்குப் பிறகு இயந்திரங்கள் பழுதடைதல், பணியாளர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஒப்பந்த முறை போன்றவற்றில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக நலிவடைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ரூ.1.10 கோடி மதிப்பில் உர ஆலை இயந்திரங்கள் முழுவதும் புத்துருவாக்கம் செய் யப்பட்டபோதும், 2 ஷிப்ட் மட்டுமே ஆலை இயங்கி வருகிறது.
இதுதொடர்பாக ஆலை நிர் வாகத்தினர் கூறியபோது, “3 ஷிப்ட் இயக்க போதுமான டெக்னீஷியன்கள், ஆபரேட்டர்கள், எலெக்ட்ரீஷியன்கள் இருந்த போதும், சுமைப்பணி தொழி லாளர்கள் பற்றாக்குறையால் ஆலை 2 ஷிப்ட் மட்டுமே இயங்கி வருகிறது” என்றனர்.
இதுகுறித்து சுமைப்பணி தொழிலாளர் மேஸ்திரி சிவானந் தம் கூறியதாவது: பாமணி உர ஆலையில் தற்போது 50 தொழி லாளர்கள் பணியாற்றி வருகிறோம். சுமைப் பணி தொழிலாளர்களால் வெளியிடங்களில் நாளொன்றுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை சம்பாதிக்க முடியும். ஆனால், பாமணி ஆலையில் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.600 வரை மட்டுமே ஊதியம் கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான தொழிலாளர்கள் உர ஆலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, கூலியை அதிகரித்தால் மட்டுமே 3 ஷிப்ட் இயங்கும் அளவுக்கு தொழிலாளர்கள் கூடுதலாக வேலைக்கு வருவார்கள் என்றார்.
முன்னாள் கவுன்சிலர் எஸ்.எப்.ராஜதுரை கூறியபோது, “பாமணி உர ஆலை தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்ற கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
இதற்கு ஆலையை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, 3 ஷிப்ட் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இயங்கினால், தற்போது மாதத்துக்கு 1,500 டன் பாமணி உரம் உற்பத்தியாகும் நிலையில், கூடுதலாக 1,000 டன் உற்பத்தி செய்ய முடியும்” என்றார்.