வடகிழக்கு பருவமழை 3 வாரம் தாமதமாகத் தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு 21.25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. விலையும் சீராக இருப்பதால் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உள்ளது.
இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் தான் உப்பு உற்பத்தி அதிகம் நடைபெறும். அக்டோபர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும்.
கரோனா காலத்திலும் உற்பத்தி
இந்த ஆண்டு வழக்கம் போல் ஜனவரியில் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கின. மார்ச் 25-ம் தேதி முதல் கரோனா ஊரடங்கால் அனைத்து தொழில்களும் முடங்கினாலும் உப்புத் தொழில் பாதிக்கப்படவில்லை. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடைசி வாரத்தில் தான் தொடங்கியுள்ளது. இதனால் 3 வாரம் கூடுதலாக உப்பு உற்பத்தி நடைபெற்றது. கடந்த 2 நாட்களுக்கு முன் பருவமழை தொடங்கியதையடுத்து உப்பு சீஸன் முடிவுக்கு வந்தது.
ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாக்கும் பணிகளில் உற்பத்தியாளர்கள் கடந்த 2 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆட்சியருக்கு பாராட்டு
இதுகுறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஏஆர்ஏஎஸ்.தனபாலன் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு தொடங்கிய காலத்தில் உப்பளத் தொழிலாளர்களுக்கு காவல் துறையினர் பல்வேறு கெடுபிடிகளை விதித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
'உப்பு அத்தியாவசிய உணவுப் பொருள் என்பதால் இத்தொழிலுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது' என ஆட்சியர் உத்தரவிட்டார். இதனால் உப்புத் தொழில் பாதிப்பின்றி நடைபெற்றது.
21.25 லட்சம் டன் உற்பத்தி
வடகிழக்கு பருவமழையும் தாமதமாக தொடங்கியதால் இந்த ஆண்டு 85 சதவீதம் அளவுக்கு, அதாவது 21.25 லட்சம் டன் உப்பு உற்பத்தியாகியுள்ளது. கடந்த ஆண்டு 70 சதவீதம் அளவுக்கு, 17.50 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு தற்போது வரை சுமார் 14 லட்சம் டன் உப்பு விற்பனையாகி விட்டது. 7.25 லட்சம் டன் மட்டுமே உப்பளங்களில் கையிருப்பில் உள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே உப்பு விலையும் சீராக இருந்து வருகிறது. தற்போது தரத்தைப் பொறுத்து ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் 1700 வரை விலை போகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை உற்பத்தியாளர்கள் இந்த ஆண்டு ஈடுகட்ட முடியும்’’ என்றார்.