தமிழகம்

திருமாவளவன் மனு நூலில் உள்ளதைத் தான் கூறியுள்ளார்: கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ

இ.ஜெகநாதன்

‘‘திருமாவளவன் மனுநூலில் உள்ளதைத் தான் கூறியுள்ளார். இதைப் பெரிய விவாதப் பொருளாக்க வேண்டிய அவசியமில்லை’’ என காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். முதல் முறையாக தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது.

திருமாவளவன் மனுநூலில் உள்ளதை தான் கூறியுள்ளார். இதைப் பெரிய விவாதப் பொருளாக்க வேண்டிய அவசியமில்லை. இதைவிட தமிழகத்தில் பெரிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர், துணை முதல்வருக்கு வரவேற்பு:

குருபூஜைக்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் காரில் சென்றனர். அவர்களை சிவகங்கை மாவட்ட எல்லையான மணலூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். உடன் மாவட்ட எஸ்பி ரோஹித்நாதன் உடனிருந்தார்.

தொடர்ந்து மானாமதுரையில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், எம்எல்ஏ நாகராஜன், அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வர், துணை முதல்வருக்கு மேலதாளத்துடன் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

SCROLL FOR NEXT