கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம் 
தமிழகம்

தமிழக ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில் இனியாவது செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

செய்திப்பிரிவு

தமிழக ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில் இனியாவது செயல்பட வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வது கானல் நீராகப் போய்விட்ட நிலையில், தமிழக சட்டப்பேரவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கடந்த 45 நாட்களாகக் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் அரசு சட்டமாக நிறைவேற்றாமல், அரசாணையின் மூலமாக 10 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்தது.

இதைப் பின்பற்றி தமிழக அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு நேற்று அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை பிறப்பித்த பிறகு தமிழக ஆளுநர் வேறு வழியின்றி இதற்குத் தற்போது ஒப்புதல் வழங்கியிருந்தாலும் அதை வரவேற்பதற்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.

அரசியலமைப்புச் சட்டப்படி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி ஒப்புதல் அளிக்க மறுத்தால் மசோதாவைத் திருப்பி அனுப்ப வேண்டும். அப்படித் திருப்பி அனுப்பியிருந்தால் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200இன்படி மீண்டும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் ஒப்புதல் தருவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. தமிழக அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையின்படிதான் தமிழக ஆளுநர் செயல்பட வேண்டும். இது அரசியலமைப்புச் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு 45 நாட்களாக ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தியதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண்டும்.

சட்ட ஆலோசனை பெறுவதற்குக் கூட சில நாட்களுக்கு மேல் அவசியமில்லை. இந்தக் காலதாமதத்திற்கான காரணம் தமிழக ஆளுநரின் அலட்சியப்போக்குதான். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளின் நிர்பந்தத்தின் காரணமாக, பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஆளுநர் வேறு வழியின்றி தமிழக அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.

எனவே, தமிழக ஆளுநர் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில் இனியாவது செயல்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT